கொரோனா அச்சமின்றி டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் தர்ணா போராட்டம் + "||" + Farmers darna protest on Delhi and Haryana border without fear of corona
கொரோனா அச்சமின்றி டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி-அரியானா எல்லையில் கொரோனா அச்சமின்றி ஒன்றாக அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டில் விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இடைத்தரகர்கள் தேவையின்றி நேரடியாக விவசாயிகளின் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வேளாண் சட்டங்கள் கொண்டிருந்தபோதிலும், இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவற்றை வாபஸ் பெற கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்வது என முடிவெடுத்தனர்.
இதன்படி, அவர்களது டெல்லிய நோக்கிய பேரணி கடந்த 26ந்தேதி காலை தொடங்கியது. அவர்கள், டிராக்டரிலும் மற்றும் நடந்தும் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
பேரணியின் முதல் நாளிலேயே விவசாயிகளில் சிலர், பாலத்தின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தூக்கி பாலத்திற்கு கீழே எறிந்தனர். அவர்களை கலைந்து போகும்படி போலீசார் விடுத்த எச்சரிக்கையை மீறிய நிலையில், அவர்களை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதற்காக வஜ்ரா வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. பின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், சுங்க சாவடியருகே அவர்களது அன்றைய இரவு பொழுது கழிந்தது. 2வது நாளில் அரியானா மற்றும் பஞ்சாப் இடையே அம்பாலா அருகே அமைந்த சம்பு எல்லை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
முந்தின நாளை போன்று வன்முறை ஏற்படாமல் தடுக்க சுருள் கம்பிகளால் சுற்றப்பட்ட தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. டெல்லி நோக்கிய தங்களுடைய டிராக்டர் பேரணியில், டெல்லியில் இருப்பதற்கு ஏதுவாக 5 முதல் 6 மாதங்களுக்கு வேண்டிய ரேசன் பொருட்களை விவசாயிகள் தங்களுடன் கொண்டு சென்றனர். எங்களுக்கு தேவையான உணவை குருத்வாராக்கள் அனுப்பி வைத்து கொண்டிருக்கின்றன என விவசாயிகளில் ஒருவரான அமன்தீப் என்பவர் கூறினார்.
இந்நிலையில், 2வது நாள் இரவில் புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் படுத்து உறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லி அரசு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று 3வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர்.
பேரணி தொடங்குவதற்கு முன்பு சிங்கு எல்லை பகுதியில் (டெல்லி மற்றும் அரியானா இடையேயான) பஞ்சாபில் இருந்து சென்ற விவசாயிகள் கூட்டம் ஒன்றை நடத்தினர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என விவசாயி ஒருவர் கூறினார்.
இந்த நிலையில், திக்ரி எல்லை பகுதியில் அதிக அளவில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லி போலீசாரின் வஜ்ரா வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
டெல்லி பேரணியில் கலந்து கொண்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பேரணி இன்று 4வது நாளாகவும் தொடர்ந்தது. புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதனால் திக்ரி எல்லை பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். விவசாயிகளை தடுப்பான்களை கொண்டு தடுத்து நிறுத்தினர். சிங்கு எல்லை பகுதியில் குவிந்த விவசாயிகள் ஒவ்வொரு நாளும் காலை 11 மணியளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்பின்னர் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி-அரியானா எல்லையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க டெல்லி அரசு தனது மக்களை கேட்டு கொண்டது. விதிமீறுவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஆனால், டெல்லி பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் ஆனவர்கள் கொரோனா பற்றிய எந்தவித அச்சம் இல்லாமலும், ரூ.2 ஆயிரம் அபராதம் பற்றிய பயமும் இல்லாமல் இருந்தது ஆச்சரியம் ஏற்படுத்தி உள்ளது.