இந்திய கலாசாரம் உலகம் முழுமைக்கும் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது; பிரதமர் மோடி உரை


இந்திய கலாசாரம் உலகம் முழுமைக்கும் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது; பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 29 Nov 2020 6:49 AM GMT (Updated: 29 Nov 2020 6:49 AM GMT)

இந்திய கலாசாரம் மற்றும் புனித நூல்கள் உலகம் முழுமைக்கும் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இன்று உரையாற்றினார்.  அவர் பேசும்பொழுது, இந்தியாவில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன் கடத்தி கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட தேவி அன்னபூர்ணா சிலை மீட்கப்பட்டது பற்றி பெருமிதமுடன் கூறினார்.

இதற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.  இந்திய கலாசாரம் மற்றும் புனித நூல்கள் ஆனது உலகம் முழுமைக்கும் ஓர் ஈர்ப்பு மையம் ஆக திகழ்கிறது.  சிலர், இந்தியாவுக்கு தங்களை தேடி வருகின்றனர்.  வாழ்வை தேடி இங்கேயே தங்குகின்றனர்.

ஒரு சிலர் இந்திய கலாசார தூதர்களாக தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புகின்றனர்.  ஜோனாஸ் மாசெட்டி என்ற விஸ்வநாத் என்பவரின் பணி பற்றி எனக்கு தெரிய வந்தது.

அவர் பிரேசில் நாட்டில் வேதாந்தம் மற்றும் கீதை பற்றிய பாடங்களை எடுத்து வருகிறார்.  விஷ்வவித்யா என்ற அமைப்பு ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.  ரியோ டி ஜெனீரோ நகரில் இருந்து ஒரு மணிநேர வாகன பயணத்தில் அடையும் பெட்ரோபோலிஸ் நகரின் மலை குன்றில் அது அமைந்துள்ளது.

ஜோனாஸ், இயந்திர பொறியியல் படிப்பு முடித்த பின்னர் தனது பங்கு சந்தை நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.  இதன்பின்னர் அவருக்கு இந்திய கலாசாரம் மீது குறிப்பிடும்படியாக வேதாந்தம் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அதனால், இந்தியாவில் அவர் வேதாந்தம் பயின்றார்.  இதற்காக கோயம்புத்தூரில் உள்ள அர்ஷ வித்யா குருகுலத்தில் 4 ஆண்டுகள் செலவிட்டு உள்ளார்.  அவரது முயற்சிகளுக்காக ஜோனாசை நான் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

Next Story