அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு இல்லை; அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்க மறுப்பு
டெல்லி போராட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து விவசாய குழுக்களுக்கும் அழைப்பு விடப்படவில்லை என கூறி அரசு விடுத்த பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது.
விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி போலீசார் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று அரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீக்கிய மதகுரு குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அமைதியான முறையில் போராட்டத்திற்கு இடையே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்கள் சென்ற டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
இதேபோன்று கொரோனா பரவல் ஏற்படாமல் தவிர்க்க மருத்துவ பரிசோதனைகளுக்கான முகாம்களும் அமைக்கப்பட்டன. விவசாயிகள் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயண போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
போராட்டம் எதிரொலியாக சிங்கு எல்லை இருபுறமும் இன்று மூடப்பட்டு உள்ளது. இதேபோன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டு உள்ளது. பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டு உள்ளன.
டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு
பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுபற்றி டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது. பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை.
அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story