டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை - மத்திய அரசு அறிவிப்பு


டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2020 11:26 PM IST (Updated: 1 Dec 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை மாலை 6.45 மணிவரை நீடித்தது. இதில் பஞ்சாபில் உள்ள 35 சங்கங்களின் பிரதிநிதிகள், ஹரியாணாவில் உள்ள விவசாய சங்கம், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு கமிட்டி, ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கதன் ஆகிய இரு அகில இந்திய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம 35 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நரேந்திர சிங் தோமர் மட்டுமின்றி, இந்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், இணை மந்திரி சோம் பிரகாஷ் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் அச்சங்களை களைய ஐவர் குழுவை அமைக்கலாம் என்றும் அதில் விவசாயிகள் தரப்பில் இடம்பெறும் சங்கங்களின் பிரதிநிதிகளின் பெயர்களை தெரிவிக்குமாறும் அரசு சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அத்தகைய குழுவால் எந்த பயனும் ஏற்படவில்லை என்று விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சட்டப்பிரிவுகளில் ஏதேனும் ஆட்சேபம் இருக்குமானால் அதை விரிவாக விளக்கினால் அதை கவனிக்க அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதிய சட்டங்களின் நன்மைகள், அவை விவசாயிகளுக்கு தரும் பலன்கள் குறித்து அவர்களிடம் அதிகாரிகள் விளக்கினார்கள். ஆனால், அதனை விவசாயிகள்  ஏற்றுக் கொள்ளாத நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசிய மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், “விவசாயிகள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் விவசாயிகள் தலைவர்கள் பேச்சுவார்த்தை அனைவருடனும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. மீண்டும் டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று அவர் கூறினார்

Next Story