இந்திய குடியரசு தின கொண்டாட்டம்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைப்பு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
புதுடெல்லி
கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக உலகளவில் உயர் மட்ட தலைவர்கள் வருகை குறைந்துள்ளன. பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த கடைசி உலகத் தலைவர்கள் மியான்மர் ஜனாதிபதி வின் மைன்ட் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்கள்
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை 2021 குடியரசு தினத்தில் முக்கிய விருந்தினராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 27 அன்று நடடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவரை முறையாக அழைத்துள்ளார். ஜான்சன், தனது பங்கிற்கு அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஜி -7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.
நவம்பர் 27 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் உரையாடினர். அப்போது இங்கிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக நவம்பரில், இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ஜான் தாம்சன் போரிஸ் ஜான்சன் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என கூறி இருந்தார்.இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு நேரில் வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதையும் மீறி, பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வர மிகவும் ஆர்வமாக உள்ளார். எனவே, அடுத்த சில மாதங்களில், எஃப்.எஸ். ராப் மற்றும் பிரதமர் ஜான்சன் ஆகிய இருவரையும் நாங்கள் எதிர்பார்க்கிரோம் , என்று தாம்சன் கூறி இருந்தார்.
குடியரசு தின அணிவகுப்பில் கடைசியாக 1993 இல் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் ஜான் மேஜர் ஆவார்.
Related Tags :
Next Story