போலீஸ் டி.ஜி.பி.க்கள் 4 நாள் மாநாடு: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
போலீஸ் டி.ஜி.பி.க்கள் மாநாடு தொடங்கியது. காணொலி காட்சி மூலம் 4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
புதுடெல்லி,
நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். தேச பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அதில் விவாதிக்கப்படும்.
வழக்கமாக டெல்லியில் மட்டுமே இந்த மாநாடு நடந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு அமைந்ததில் இருந்து ஆண்டுதோறும் பிற நகரங்களில் நடந்து வந்தது.
இந்த ஆண்டுக்கான மாநாடு நேற்று தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இம்மாநாடு முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த டி.ஜி.பி., ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள சுமார் 250 அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் பங்கேற்று வருகின்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் போலீஸ் பதக்கங்களை வழங்கினார். இந்த மாநாடு, மொத்தம் 4 நாட்கள் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
பல்வேறு அமர்வுகளாக மாநாடு நடக்கும். பேரிடர் மற்றும் கொரோனா காலங்களில் போலீசார் ஆற்றிய முக்கிய பணிகள், இணைய பயங்கரவாதம், இளைஞர்களை மூளைச்சலவை செய்வது, காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் ஆகிய பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
தேசிய பேரிடர்களை கையாள்வதில் போலீசாரின் திறமைகளை அதிகரிப்பது, தடுப்பூசி போடும் பணியில் உதவி ஆகியவை பற்றியும் பேசப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியது, கொரோனாவை கையாண்டது உள்ளிட்ட தங்கள் அனுபவங்களை போலீஸ் அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக போராடியதில் போலீசாரின் அளப்பரிய பணி குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 80 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 650 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story