புரெவி புயல்: கேரளாவில் 8 தேசிய பேரிடர் மீட்பு படை குவிப்பு


புரெவி புயல்:  கேரளாவில் 8 தேசிய பேரிடர் மீட்பு படை குவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2020 5:31 AM GMT (Updated: 3 Dec 2020 5:31 AM GMT)

கேரளாவில் புரெவி புயலை எதிர்கொள்ள 8 தேசிய பேரிடர் மீட்பு படை குவிக்கப்பட்டு உள்ளன.

திருவனந்தபுரம்,

நிவர் புயலை தொடர்ந்து வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி என்ற மற்றொரு புயலானது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை கடக்கிறது.

இதன்பின்னர் இன்று காலை மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். அதனைத்தொடர்ந்து இன்று பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருகிறது. பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.  இந்த புயலானது தமிழகம், கேரளா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும்.

கேரளாவில் புரெவி புயலை எதிர்கொள்ள திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 8 தேசிய பேரிடர் மீட்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story