வேளாண் சட்டங்கள்: விவசாய சங்க தலைவர்கள், மத்திய அரசு இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை
வேளாண் சட்டங்கள் பற்றி விவசாய சங்க தலைவர்கள் மற்றும் மத்திய வேளாண் மந்திரி தலைமையில் அரசுடனான பேச்சுவார்த்தை டெல்லியில் நடந்து வருகிறது.
புதுடெல்லி,
விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.
டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.
விவசாயிகளின் பேரணியால் டெல்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வாகன போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தரைவழியாக டெல்லிக்கு செல்லும் மக்கள் இதனால் அவதியடைந்து உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு மந்திரிகளும் பங்கேற்றனர். இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் இன்று விவசாய சங்க தலைவர்களை சந்திப்பதற்கு முடிவானது. இதன்படி, 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டு உள்ளது.
இதற்கு ஒருதரப்பு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அனைத்து 507 விவசாய அமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கூட்டம் நடத்த வேண்டும்.
அப்படி ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளாதவரை மத்திய அரசின் எந்தவொரு பேச்சுவார்த்தை கூட்டத்திலும் நாங்கள் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறினர்.
எனினும், விவசாய தலைவர்களுடனான பேச்சுவார்த்தை கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியுள்ளது. இதில், மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அரசு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்திற்கு செல்வதற்கு முன் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி தோமர், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.
Related Tags :
Next Story