டெல்லி பேரணி: நாளை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; விவசாயிகள் நொய்டா அருகே ஓய்வு


டெல்லி பேரணி:  நாளை அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; விவசாயிகள் நொய்டா அருகே ஓய்வு
x
தினத்தந்தி 4 Dec 2020 6:17 PM GMT (Updated: 4 Dec 2020 6:17 PM GMT)

டெல்லி பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் அரசுடன் நாளை 5வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் நொய்டா அருகே ஓய்வு எடுத்து இரவை கழிக்கின்றனர்.

புதுடெல்லி,

வேளாண் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் நோக்கில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது.  இதற்கு விவசாயிகளில் ஒரு தரப்பினரிடையே எதிர்ப்பு வலுத்தது.

இதனை தொடர்ந்து இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவானது.

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதி பேரணியாக திரண்டனர்.  தொடர்ந்து இன்று 9வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

இதற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் கடந்த 1ந்தேதி அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது.  அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.  தொடர்ந்து போராட்டம் நீடித்தது.

இதனை தொடர்ந்து கடந்த 3ந்தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய மந்திரி தோமர் விவசாய சங்க தலைவர்களை சந்தித்து பேசினார்.  இதன்படி, 35க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.  எனினும், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் டெல்லி எல்லை பகுதியான நொய்டாவில் மயூர் விகார் பகுதியருகே கூடாரங்களை அமைத்து இரவில் ஓய்வு எடுக்க தொடங்கியுள்ளனர்.

Next Story