எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை: ஐதராபாத் தொங்கும் மாநகராட்சி?


Image courtesy: GHMC PRO
x
Image courtesy: GHMC PRO
தினத்தந்தி 5 Dec 2020 11:18 AM IST (Updated: 5 Dec 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 76 வார்டுகள் கிடைக்கவில்லை.

ஐதராபாத், 

150 வார்டுகளைக் கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு 1-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த மாநகராட்சியை பிடிப்பதற்காக பிரசாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வரையிலான தலைவர்களை பா.ஜ.க. களம் இறக்கியது. ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு முதல்-மந்திரி கே.சந்திரசேகர்ராவும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு ஒவைசியும் பிரசாரம் செய்தார்கள்.

டி.ஆர்.எஸ். கட்சி 150 வார்டுகளிலும், பா.ஜ.க. 149 வார்டுகளிலும், காங்கிரஸ் 146 வார்டுகளிலும், தெலுங்குதேசம் கட்சி 106 வார்டுகளிலும், ஒவைசி கட்சி 51 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. வாக்குச்சீட்டு மூலம்தான் ஓட்டுப்பதிவு நடந்தது. 46.55 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. தொடர்ந்து பிற ஓட்டுகள் எண்ணப்பட்டன. டி.ஆர்.எஸ். கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. நேற்று இரவு 9 மணிக்கு 150 வார்டுகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. அவற்றில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இரண்டாவது இடத்தை பா.ஜ.க. பிடித்தது. அந்தக் கட்சிக்கு 49 வார்டுகள் கிடைத்தன. ஒவைசி கட்சி 43 வார்டுகளை பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 2 வார்டுகள் மட்டுமே கிடைத்தன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 76 வார்டுகள் கிடைக்கவில்லை அதனால் அங்கு தொங்கும் மாநகராட்சி என்ற சூழல் உருவாகி உள்ளது.

பெரும்மான்மைக்கு 76 இடங்கள் தேவையான நிலையில் எந்த கட்சிக்கும் அதிகப்படியான இடங்கள் கிடைக்கவில்லை.  

ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தபோதிலும், மேயர் பதவியை பெற முடியாத நிலை உள்ளது. மேயர் பதவியை பெற குறைந்தபட்சம் 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஒவைசி கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே ஆளும் டி.ஆர்.எஸ். மேயர் பதவியை பெற முடியும்.

கடந்த தேர்தலைப் போன்றே 44 வார்டுகளில் வெற்ற பெற்ற ஒவைசி கட்சி, மேயர் பதவியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளது. ஆளும் டி.ஆர்.எஸ். – ஒவைசி கட்சி கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் மாநகராட்சியின் 136-வது வார்டான நீரத்மெட் பகுதியில் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story