10-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: பிரதமர் இல்லத்தில் மந்திரிகள் ஆலோசனை


Image courtesy : PTI
x
Image courtesy : PTI
தினத்தந்தி 5 Dec 2020 1:45 PM IST (Updated: 5 Dec 2020 1:45 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 10-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர்.

ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அதனால் நேற்று முன்தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் (மத்திய மந்திரிகள்) பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரிகள் உறுதியளித்தனர். எனினும் சட்டத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விவசாயிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியதால் இந்த பேச்சுவார்த்தையும் முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்தது.

மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்ந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளிடம் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில், பிரதமர் இல்லத்தில் மத்திய மந்திரிகள்  அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story