தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு + "||" + Haryana Minister, Who Got Trial Dose Of Covid Vaccine, Tests Positive
தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட மந்திரி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு
அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார்.
அம்பாலா,
இந்தியாவில் பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியது. இதில் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியுள்ளது.
அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் தன்னார்வலராக மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் (வயது 67) பங்கேற்று, தனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தினார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில், அரியான மந்திரி அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் அனில் விஜ் பதிவிட்டுள்ளார். அனில் விஜ் வெளியிட்டுள்ள பதிவில், “ எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப காலங்களில் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.