டெல்லியில் விவசாயிகளுடன், மத்திய அரசு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது
மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திக்ரி, சிங்கு, காஜிப்பூர் போன்ற எல்லைகளை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால் அண்டை மாநிலங்களுடனான தொடர்பை டெல்லி இழந்து வருகிறது. குறிப்பாக அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1-ந் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மத்திய அரசு சார்பில் பங்கேற்ற வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராய குழு அமைக்க பரிந்துரைத்தனர். ஆனால் இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் இன்று 5 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் இல்லத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நரேந்திரசிங் தோமர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய பரிசீலிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story