புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிச.10-ல் அடிக்கல் நாட்டுகிறார்


புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிச.10-ல் அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 5 Dec 2020 7:38 PM IST (Updated: 5 Dec 2020 7:38 PM IST)
t-max-icont-min-icon

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1927-ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளதாக மக்களவை சபைத் தலைவர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல்நாட்டுவார் என ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

முக்கோண வடிவத்தில் அமையும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன், ஒரு பொது மத்திய செயலகம் கட்டவும், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. நீள ராஜபாதையை மேம்படுத்தவும் புதிய மத்திய அதிகார வளாக மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியப் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு மாபெரும் அரங்கு, உறுப்பினர்களுக்கான வளாகம், நூலகம், பல்வேறு குழுக்களுக்கான அறைகள், உணவருந்தும் இடம் மற்றும் போதுமான வாகனநிறுத்தப் பகுதி ஆகியவை அமைந்திருக்கும்.

அனைத்து எம்.பி.களுக்கும் தனித்தனி அலுவலகங்கள் கட்டப்படும். அவை காகித ஆவணங்களற்ற அலுவலகங்களாக செயல்படும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள் இருக்கும்.புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணியை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம், ரூ.861.90 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இருக்கிறது. 


Next Story