ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு திடீர் உடல்நல குறைவு


ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு திடீர் உடல்நல குறைவு
x
தினத்தந்தி 6 Dec 2020 10:34 PM IST (Updated: 6 Dec 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது என்றும் சுகாதார அவசரகால நிலையை அறிவிக்க வேண்டும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி கோரியுள்ளது.

மேற்கு கோதாவரி,

ஆந்திர பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு நகரில் ஒரே பகுதியில் வசித்து வரும் 25 பேருக்கு நேற்று திடீரென வாந்தி, குமட்டல் ஏற்பட்டது.  அவர்களில் 18 பேர் குழந்தைகள்.  மற்ற 7 பேரும் பெரியவர்கள்.

அவர்கள் அனைவரும் உடனடியாக எலுரு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  இந்த பாதிப்புக்கான சரியான காரணம் தெரியவரவில்லை.

அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி அறிய மருத்துவர்களும் முயன்றுள்ளனர்.  சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என கூறப்பட்டது.  ஒரு சிறுமி சிறப்பு சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோன்று நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  அந்த பகுதியில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் மருத்துவர்கள் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ஆந்திர பிரதேச சுகாதார மந்திரி அல்லா காளிகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ் சம்பவம் பற்றி அறிந்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை பார்வையிட்டார்.  அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தெலுங்கு தேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, ஆந்திர பிரதேசத்தில் ஒரே நாளில் 300 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.  மக்கள் சுயநினைவை இழந்து வருகின்றனர்.  அரசின் அலட்சியமே இந்த சூழ்நிலைக்கு காரணம்.

எலுரு நகர் முழுவதும் தூய்மையாக இல்லை.  இதன் எதிரொலியாக பாதிப்பு பரவியுள்ளது.  பெருமளவிலான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு வலி ஏற்படுத்துகிறது.

நோயாளிகளை அவசரகதியில் வீட்டிற்கு அனுப்ப அரசு முயற்சி செய்கிறது.  இந்த பகுதியின் பொது சுகாதாரத்தில் அரசின் அலட்சியம் தெரிகிறது.  அரசு சுகாதார அவசரகால நிலையை அறிவித்து சிறந்த மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரியுள்ளார்.

கடந்த 5 நாட்களில் இந்த அளவிற்கு பாதிப்புகள் தெரிய வந்துள்ளன.  இந்த எலுரு பகுதியின் வேட்பாளராக சுகாதார மந்திரி இருந்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story