விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் - டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் எல்லைப்பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லை நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில் அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 10 மணி அளவில் விவசாயிகள் போராட்டக் களத்திற்கு நேரில் சென்றார். அங்கு விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும் விவசாயிகளுடன் சந்தித்து பேசினார்.
விவசாயிகளுடன் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
"நான் ஏற்பாடுகளைச் சரிபார்த்தேன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சினையும் கோரிக்கைகளும் முக்கியமானவையாகும். நானும் எனது கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடன் துணை நிற்கிறோம்.
அவர்கள் ஆரம்பத்தில் போராட்டம் நடத்தத் தொடங்கியபோது, டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களை சிறைகளாக மாற்ற எனக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்பட்டது; ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. நாங்கள் எடுத்த முடிவு விவசாயிகளுக்கு உதவிகரமாக அமைந்தது.
எங்கள் கட்சி, எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் விவசாயிகளுக்கு உரிய சேவைகளை வழங்கி வருகின்றனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஆனால் ஒரு சேவகனாகத்தான் வந்துள்ளேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர், நாங்கள் அவர்களுடன்தான் நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும் பாரத் பந்த்தை ஆதரிக்கிறது. எங்கள் கட்சித் தொண்டர்களும் இதில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
Related Tags :
Next Story