மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் - மம்தா பானர்ஜி ஆவேசம்


மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் - மம்தா பானர்ஜி  ஆவேசம்
x
தினத்தந்தி 7 Dec 2020 4:48 PM IST (Updated: 7 Dec 2020 4:48 PM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ஆளும் பாஜக அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தா

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களால் டெல்லி முடங்கி உள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது.  நாளை விவசாயிகள் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா  அரசு, புதிதாகக் கொண்டு வந்த மக்களுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்காள  முதல்வர் மம்தா பானர்ஜி  கூறி உள்ளார்.

மேற்கு மிட்னாபூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது:- 

 பா.ஜனதா  அரசின் அராஜகப் போக்கை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருப்பதை விட, கைது செய்யப்பட்டு சிறை செல்வதே மேல்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு, உடனடியாக புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும். இல்லையென்றால் பதவி விலக வேண்டும். விவசாயிகளின் உரிமைகளை தியாகம் செய்துவிட்டு, பா.ஜனதா பதவியில் நீடிக்கக் கூடாது.

விவசாயிகளுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக நான் உறுதியளிக்கிறேன்.  மேற்கு வங்க மாநிலத்தில் இலவச ரேஷன் திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை செயல்படுத்தப்படும் என கூறினார்.

தனது கட்சி  "முழு கடையடைப்பை" ஆதரிக்கவில்லை என்பதை இன்று தெளிவுபடுத்திய முதல்வர், விவசாயிகள் நாளை முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

நாங்கள் எவ்வளவு வேலை செய்தாலும், எங்கள் கொள்கைகள் எப்போதும் மோசமானவை என்று சொல்லப்படுகின்றன . ரபேல் மோசடி மோசமானதல்ல,பிரதமர் கேர்ஸ் நிதி   விவரங்களை வெளியிடாதது மோசமானதல்ல ஆனால் அவர்கள்( பா.ஜனதா) இங்கே ஆம்பான் சூறாவளி சேதம் குறித்த கணக்கை விரும்புகிறார்கள்.

தாஜ்பூரில் ஆழமான துறைமுகத்தை நிர்மாணிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ரூ .15,000 கோடி செலவில் கட்டப்பட்டு 25,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இது மாநிலத்தின் முதல் ஆழ்கடல் துறைமுகமாக இருக்கும் என கூறினார்.

Next Story