மேற்கு வங்காள மாநிலம்: பா.ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் மோதல்;தொண்டர் ஒருவர் பலியானதாக மாநில தலைவர் குற்றச்சாட்டு
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், போலீசார் தாக்கி தொணடர் ஒருவர் பலியானதாக மாநில தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.
சிலிகுரி
மேற்கு வங்காள மாநில அரசு வட வங்காள மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை, அரசின் நலத்திட்டங்கள் சாமானிய மக்களை சென்றடையவில்லை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதாவின் இளைஞர் அமைப்பான பிஜேஎம் சிலிகுரியில் உத்தர்கன்யா என்ற பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
பா.ஜனதா இளைஞர் அமைப்பின் தேசியத் தலைவராக உள்ள மக்களவை எம்.பி. தேஜஸ்வி சூர்யா உத்தர்கன்யா பேரணிக்கு சிலிகுரிக்கு வந்திருந்தார். பேரணியில் வட வங்காள பா.ஜனதாவின் 7 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர், கட்சியின் இரு மாநில பொறுப்பாளர்களான கைலாஷ் விஜயவர்ஜியா மற்றும் அரவிந்த் மேனன், பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா பேரணியைத் தடுத்து நிறுத்த போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து இருந்தனர். தொண்டர்கள் தடுப்புகளை உடைத்து கொண்டு செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். இதனால் சில தொண்டர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட மூங்கில் தடுப்புகளுக்கு தீ வைத்தனர். இந்த மோதல்களில் பல பா.ஜனதா தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
பா.ஜனதா தொண்டர் உலன் ராய் என்பவர் போலீஸ் தடியடியில் உயிர் இழந்ததாக மாநில தலைவர் திலீப் கோஷ் குற்றம் சாட்டி உள்ளார்.உலன் ராய் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்தார் என்று கோஷ் கூறினார்.
Related Tags :
Next Story