விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு தொடங்கியது


விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு தொடங்கியது
x
தினத்தந்தி 8 Dec 2020 8:19 AM IST (Updated: 8 Dec 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு தொடங்கியுள்ளது.

புதுச்சேரி,

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவற்றை வாபஸ் பெறக் கோரியும் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம், புதுச்சேரியிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினரும் ஆதரவு அளித்துள்ளனர். வணிகர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் ஆதரவு திரட்டி உள்ளனர். 

இந்தநிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு இன்று காலை தொடங்கியது. முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயங்காததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பா விதம் ஏதும் ஏற்படாத வண்ணம் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் உத்தரவின்பேரில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

Next Story