விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திராவில் இடதுசாரிகள் போராட்டம்
விவசாயிகள் அறிவித்த முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து ஆந்திராவில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத்,
மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டம் ஆகிவற்றை எதிர்த்தும், அச்சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் 8-ந் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்தனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த ‘பாரத் பந்த்’ எனப்படும் நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திராவின் ஏ.ஐ.சி.டி.யு. உள்ளிட்ட இடதுசாரிகள் கலந்து கொண்டு வேளாண் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story