கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த சில வாரங்களில் அனுமதி வழங்கப்படலாம்: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன.
இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தில் பொதுபயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்துள்ளன.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த சில வாரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ராஜேஷ் பூஷன் கூறியதாவது: - “ இந்தியாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. மொத்த பாதிப்பில் இது 4 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.
கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், செப்டம்பருக்குப் பிறகு இந்தியாவில் சீராக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் ஏற்படும் தொற்று பாதிப்பில் மராட்டியம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்கள் 54 சதவீதம் பங்களிக்கின்றன. சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்கள் அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்துள்ளன.
அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்துள்ளார். விஞ்ஞானிகள் பச்சைக்கொடி காட்டியதும் கொரோனா தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி செய்யும் பணி தொடங்கும். இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. அடுத்த சில வாரங்களில் சில தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.
தடுப்பூசி விநியோகம் தொடர்பான தயார் நிலைகள் மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன. தடுப்பூசி பயன்பாடு என்பது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு மட்டும் கிடையாது. இதில் மக்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story