உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்; ரோஷினி நாடார்


உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்; ரோஷினி நாடார்
x
தினத்தந்தி 9 Dec 2020 3:49 PM IST (Updated: 9 Dec 2020 3:49 PM IST)
t-max-icont-min-icon

உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்தியமைச்சர் நிர்மலாசீதாராமன்; ரோஷினி நாடார், கிரண் மஜூதார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

புதுடெல்லி

2020ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியல் 17-வது முறையாக  வெளியிடப்பட்டு உள்ளது. இதில் இந்திய பெண்களும் இடம்பிடித்துள்ளனர்.  2020ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல் தொடர்ந்து 10 வது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார்.

30 நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 34வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்த பட்டியலில் 3 ம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தர் ஷா, ஹெச்.சி.எல்  தலைமை நிர்வாக அதிகாரி  ரோஷினி நாடார் இந்த பட்டியலில் இடம்பிடித்து உ ள்ளனர். ரோஷ்னி நாடார் 55வது இடத்திலும்,  கிரண் மஜும்தார்-ஷா 68வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது  இடத்திலும் உள்ளனர். 

இந்த பட்டியலில் 10 அரசியல் தலைவர்கள், 38 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் உள்ளனர். இதில் இடம்பிடித்துள்ளவர்கள் அனைவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் காலூன்றி திறம்பட செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 17 பெண்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story