கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 10 Dec 2020 7:36 AM IST (Updated: 10 Dec 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழை, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாவட்டங்களில் இறுதி கட்ட நிலவரப்படி மொத்தம் 72.67 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை விட (75.11 சதவீத) வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது. 

இதனை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 2-ம் கட்ட வாக்குப்பதிவு கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு நடக்கிறது. 451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8,116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த 5 மாவட்டங்களில் 47 லட்சத்து 28 ஆயிரத்து 489 ஆண் வாக்காளர்கள், 51 லட்சத்து 28 ஆயிரத்து 361 பெண் வாக்காளர்கள், 93 திருநங்கைகள் உள்பட மொத்தம் 98 லட்சத்து 57 ஆயிரத்து 208 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதில் 57 ஆயிரத்து 895 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள்.

12,643 வாக்குச்சாவடிகள் தயாராக உள்ள நிலையில், 63 ஆயிரத்து 187 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான 473 வாக்குச்சாவடிகளை ஆன்லைன் மூலம் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

மேலும் இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேட்பாளர்களின் திடீர் மரணத்தை தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் களமசேரி நகராட்சியில் 37-வது வார்டு மற்றும் திருச்சூர் மாநகராட்சியில் புல்லழி 47-வது வார்டு ஆகியவற்றில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

வாக்குப்பதிவுன் போது கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படும். வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். தனி மனித, சமூக இடைவெளியுடன் ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story