தொடர்ந்து 11 நாட்களாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை விட குறைவு
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 11 நாட்களாக 40 ஆயிரத்தை விட குறைவாக உள்ளது.
புதுடெல்லி:
உலகம் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா தொற்றின் வீரியம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறது. இங்கு சராசரியாக நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொண்டபோதும், தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சில பத்தாயிரங்களிலேயே நீடிக்கிறது.
10 லட்சத்துக்கு குறைவான பரிசோதனைகள் நடந்த காலத்தில் கூட சுமார் 1 லட்சம் வரை தொற்றுகள் கண்டறியப்பட்ட நாட்களும் உண்டு. ஆனால் தற்போது அதிகமான பரிசோதனை நடந்தபோதும் தினசரி தொற்று 40 ஆயிரத்துக்கு கீழேதான் இருக்கிறது.
அந்தவரிசையில் தொடர்ந்து 11–வது நாளாக இன்றைய பாதிப்புகளும் 40 ஆயிரத்துக்கு கீழேதான் இருந்தன. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 521 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 97 லட்சத்து 67 ஆயிரத்து 371 ஆகி விட்டது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 74.65 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் மராட்டியர்கள் 4,981 பேர், கேரளத்தவர்கள் 4,875 பேர், மேற்கு வங்காளத்தினர் 2,956 பேர் அடங்குவர்.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 412 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 75 பேரும், டெல்லியில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் இந்தியாவின் பலி விகிதம் 1.45 என்ற அளவிலேயே நீடித்து வருகிறது.
நாடு முழுவதும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையை விட, புதிதாக குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தினசரி அதிகமாக உள்ளது. அந்தவரிசையில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்திலும் 37 ஆயிரத்து 725 பேர் குணமடைந்திருக்கின்றனர்.
இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்து 53 ஆயிரத்து 306 என்ற அளவை எட்டியிருக்கிறது. இது மொத்த பாதிப்பில் 94.74 சதவீதம் ஆகும்.
புதிதாக குணமடைந்தவர்களில் 77.30 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 5,051 பேரும், கேரளாவில் 4,647 பேரும், டெல்லியில் 4,177 பேரும் ஒரே நாளில் குணமடைந்து உள்ளனர்.
நாடு முழுவதும் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 4–வது நாளாக இன்றும் 4 லட்சத்துக்கு கீழேயே இருந்தது. இன்று காலை நிலவரப்படி மொத்தம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 293 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இது மொத்த பாதிப்பில் 3.81 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் நேற்று நடத்தப்பட்ட 9 லட்சத்து 22 ஆயிரத்து 959 கொரோனா பரிசோதனைகளையும் சேர்த்து மொத்த பரிசோதனை எண்ணிக்கை 15 கோடியே 7 லட்சத்து 59 ஆயிரத்து 726 ஆகி இருக்கிறது. இதில் கடைசி 1 கோடி பரிசோதனைகள் வெறும் 10 நாட்களில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.