பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயார்: மத்திய அரசின் யோசனையை பரிசீலிக்க விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி கோரிக்கை


பேச்சுவார்த்தைக்கு மீண்டும் தயார்:  மத்திய அரசின் யோசனையை பரிசீலிக்க விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2020 9:20 PM IST (Updated: 10 Dec 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கியிருக்கும் யோசனைகளை விவசாய அமைப்புகள் பரிசீலிக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் கடந்த 8ந்தேதி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த சட்டங்கள் தொடர்பாக பல்வேறு யோசனைகள் அடங்கிய சமரச திட்டம் ஒன்றை விவசாய அமைப்பு பிரதிநிதிகளுக்கு மத்திய வேளாண்துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் அனுப்பி வைத்தார்.

இதில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி வழங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. அத்துடன் மண்டி (சந்தை) அமைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இந்த சட்டங்களில் குறைந்தபட்சம் 7 திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு தயார் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் மத்திய அரசின் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். அந்தவகையில் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் யோசனைகளை விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

விவசாயிகளுடனான சந்திப்புக்குப்பின் எங்கள் யோசனைகளை விவசாயிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். அவற்றை பரிசீலிக்குமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்கு ஆர்வமாகவும், தயாராகவும் அரசு உள்ளது.

அரசு அனுப்பிய பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றாலும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். புதிய சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த முறை தொடரும். புதிய சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளின் எத்தகைய கவலைகளையும், சந்தேகங்களையும் தீர்ப்பதற்கு அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளது.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இருந்து பரிந்துரைகளை கேட்பதற்கும், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் சட்டங்களை திரும்பப்பெறுவதிலேயே குறியாக இருக்கின்றனர். கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உடல்நிலை குறித்து கவலையாக உள்ளது.

எனவே போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு விவசாய சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை கேட்டுக்கொள்கிறேன். அரசின் யோசனைகளை விவசாய அமைப்புகள் விரைவாக பரிசீலிக்க வேண்டும். அதன் மூலம் மேலும் பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டால் நடத்த முடியும்.  இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

அப்போது உடனிருந்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், புதிய வேளாண் சட்டங்கள் வேளாண் உற்பத்தி சந்தைக்குழுவை (ஏ.பி.எம்.சி.) பாதிக்காது. அவை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று கூறினார்.


Next Story