ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் தாக்குதல் தலைமை செயலர்-டி.ஜி.பி.,க்கு மத்திய அரசு சம்மன்


Image courtesy : ANI/Twitter
x
Image courtesy : ANI/Twitter
தினத்தந்தி 11 Dec 2020 2:17 PM IST (Updated: 11 Dec 2020 3:07 PM IST)
t-max-icont-min-icon

ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.

கொல்கத்தா, 

பா.ஜனதாவை மேலும் பலப்படுத்துவதற்காக, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள மேற்கு வங்காளத்துக்கு 2 நாள் பயணமாக அவர் சென்றார்.

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் டயமண்ட் ஹார்பர் பகுதியில் அவர் பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்காக ஜே.பி.நட்டா கொல்கத்தாவில் இருந்து கார் மூலம் அங்கு புறப்பட்டார். அவருடன் பா.ஜனதா நிர்வாகிகள் பலரது கார்களும் சென்றன.

வழியில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தை நெருங்கியதும், அவர்கள் ஜே.பி.நட்டாவின் கார் அணிவகுப்பு மீது சரமாரியாக கல்வீச்சில் ஈடுபட்டனர். கார் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளர்களின் வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை.

பின்னர், போலீசார் தலையிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அதையடுத்து, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் டயமண்ட் ஹார்பர் போய் சேர்ந்தனர்.

தாக்குதலில், பலரது வாகனங்கள் சேதமடைந்தன. பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் கார் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது. தாக்குதலில் அவர் காயமடைந்தார்.

பா.ஜனதா தேசிய இணை பொதுச்செயலாளர் சிவபிரகாஷ், செயலாளர் அனுபம் ஹஸ்ரா ஆகியோரின் வாகனங்கள் சேதமடைந்தன. அனுபம் ஹஸ்ராவும் காயமடைந்தார். நல்லவேளையாக, ஜே.பி.நட்டா காயமின்றி உயிர் தப்பினார்.

இதற்கிடையே, இந்த தாக்குதல் குறித்து மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஜே.பி.நட்டாவின் சுற்றுப்பயணத்தின்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கடுமையான குறைபாடுகள் காணப்பட்டதாகவும், போலீஸ் துறை அலட்சியமாக செயல்பட்டதாகவும் திலீப் கோஷ் கூறியிருந்தார்.

அதன்பேரில், பாதுகாப்பு குறைபாடு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இதனிடையே, மாநிலத்தில் நிலவும் மோசமான சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக 14ம் தேதி விளக்கம் அளிக்கும்படி, மே.வங்க மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்த கவர்னர் ஜெக்தீப் தன்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக கவர்னர் கூறும் போது 'அரசியல் சாசனத்தை முதல்வர் மதித்து நடக்க வேண்டும். தனது கடமையில் இருந்து அவர் விலக முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நீண்ட காலமாக மோசமாக உள்ளது. நேற்று நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜனநாயக மாண்புக்கு எதிராக நடந்த சம்பவங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன்' எனக்கூறினார்.

நட்டா கார் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் மேற்கு வங்காளத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story