தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு


தலைமைச்செயலாளர், டி.ஜி.பி.யை டெல்லி அனுப்ப மாட்டோம்- மம்தா அரசு முடிவு
x
தினத்தந்தி 12 Dec 2020 3:01 AM IST (Updated: 12 Dec 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைவர் கார் மீது கல்வீசி தாக்குதல் விவகாரத்தில் கவர்னரின் அறிக்கையை தொடர்ந்து, மாநில அரசு தலைமைச்செயலாளரும், டி.ஜி.பி.யும் நேரில் விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் ‘சம்மன்’ அனுப்பி இருந்தது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா சுற்றுப்பயணம் செய்தபோது, அவரது காரும், உடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில அரசின் தலைமைச்செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் 14-ந் தேதி டெல்லிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு ஏற்ப தலைமைச்செயலாளரையும், போலீஸ் டி.ஜி.பி.யையும் டெல்லிக்கு அனுப்புவது இல்லை என்று மம்தா பானர்ஜி அரசு முடிவு எடுத்துள்ளது.

இது மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு மாநில அரசு தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யா எழுதி உள்ள கடிதம் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்த கடிதத்தில் அவர் எழுதி இருப்பதாவது:-

இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றவர்கள் தொடர்பான சில சம்பவங்கள் உள்ளிட்ட மேற்கு வங்காள மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பற்றி விவாதிப்பதற்கு 14-ந் தேதி நடக்கும் கூட்டத்தில் மேற்கு வங்காள அரசின் தலைமைச்செயலாளரும், டி.ஜி.பி.யும் கலந்துகொள்ளுமாறு உங்கள் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் மேலும் அறிக்கைகள் பெறப்பட்டு, தொகுக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சினையை மாநில அரசு மிக தீவிரமாக கவனித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கூட்டத்தில் மாநில அரசு அதிகாரிகள் நேரில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ள எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story