வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டம்: அரியானா விவசாயிகள் குழு எச்சரிக்கை


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 12 Dec 2020 11:06 PM IST (Updated: 12 Dec 2020 11:06 PM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரியானாவைச் சேர்ந்த 29 விவசாயிகள் அடங்கிய குழு இன்று (சனிக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 16-வது நாளாக நேற்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, சில்லா உள்ளிட்ட எல்லைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து முடங்கி வருகிறது. 

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு, இது தொடர்பாக சில யோசனைகள் அடங்கிய பரிந்துரை ஒன்றை விவசாயிகளுக்கு அனுப்பி வைத்தது. குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி, மண்டிகள் தொடர்வதற்கான வழிமுறைகள் என பல்வேறு பரிந்துரைகள் அதில் அடங்கியிருந்தன.

ஆனால் இந்த யோசனைகளை நிராகரித்த விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர். குறிப்பாக டெல்லி செல்லும் சாலைகள் அனைத்தையும் மூடப்போவதாகவும், ரெயில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு  அரியானாவை சேர்ந்த விவசாயிகள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.  பாரதிய விவசாய சங்கத்தின் அரியானா  மாநிலத் தலைவர் குனி பிரகாஷ் தலைமையில் 29 விவசாயிகள் அடங்கிய குழு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்தனர். அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சரிடம் ஆதரவுக் கடிதத்தை சமர்பித்தனர்.

 பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த குனி பிரகாஷ், "வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால்  நாங்களும் போராட்டத்தில் குதிப்போம்.  அனைவருக்கும் போராடுவதற்கு உரிமை உண்டு. அவர்களுக்கு போராட உரிமை இருக்கும்போது, எங்களுக்கும் போராட உரிமை இருக்கிறது. நாங்கள் 3 சட்டங்களுக்கும் ஆதரவானவர்கள். இந்தப் போராட்டம் இடதுசாரிகளால் வழிநடத்தப்படுகிறது.  இந்த 3 சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்" என்றார். 

Next Story