வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 18-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 18-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2020 10:16 AM IST (Updated: 13 Dec 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 18-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, திக்ரி, சில்லா, காஜிப்பூர் என டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 18-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். டெல்லியில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில் சிலயோசனைகளை விவசாயிகளுக்கு அரசு அனுப்பியது. குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த எழுத்துப்பூர்வ உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக இருக்கும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் போராட்டத்தின் அடுத்தகட்டமாக டெல்லிக்கு வரும் சாலைகளை அடைக்கப்போவதாகவும் அவர்கள் கூறியியுள்ளனர். எனவே விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் என தெரிகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நிபந்தனைகளை விதித்து உள்ளனர். 

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விரும்பினால், நாங்கள் தயார். ஆனால் 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. அது குறித்துதான் முதலில் பேசவேண்டும். அதன்பிறகே எங்களின் பிற கோரிக்கைகள் குறித்து பேசுவோம். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் 14-ந்தேதி (நாளை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளனர் என்று விவசாய அமைப்பு தலைவர்களில் ஒருவரான கன்வல்பிரீத் சிங் பன்னு, நேற்று கூறினார். விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது. 

Next Story