விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது வேளாண் மந்திரி குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போர்க்கோலம் பூண்டு வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து இருக்கின்றன.
இதனால் 18 நாட்களை கடந்து போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க உத்தரகாண்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரை சந்தித்து, புதிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய தோமர், இந்த போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபோது மத்திய அரசு எதிர்ப்புகளை சந்தித்தது. இதைப்போல குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ராமர் கோவில் விவகாரங்களிலும் கடும் எதிர்ப்புகள் வந்தன. அந்த அடிப்படையிலேயே வேளாண் சீர்திருத்தங்களை கொண்டு வந்தபோதும், எதிர்ப்புகள் வருகின்றன.
வெறும் எதிர்ப்புகள் தெரிவிப்பதற்கு என்றே சிலர் (எதிர்க்கட்சிகள்) இருக்கின்றனர். அவர்கள் நாட்டை பலப்படுத்தி விட்டனர். எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது அவர்களது வழக்கமாகி விட்டது. வேளாண் சீர்திருத்தங்களை பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாகவே விவாதங்கள் நடந்து வந்தன. துரதிர்ஷ்டவசமாக இந்த சீர்திருத்தங்களை கொண்டு வர எண்ணிய முந்தைய அரசுகளால் அது முடியவில்லை.
ஒரு புதிய இந்தியாவுக்கு, இத்தகைய சீர்திருத்தங்கள் அவசியம். இந்த சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்போது விவசாயிகளுக்கு நீண்ட காலத்துக்கு பலனளிக்கும். ஆனால் குறுகிய கால அடிப்படையில், இவற்றால் சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் வலி இல்லாமல் நன்மைகளை அடைய முடியாது என்பது நமக்கு தெரியும்.
எந்த ஒரு சிறந்த அரசோ அல்லது சிறந்த தலைவரோ நாட்டின் பாதுகாப்பு மட்டுமின்றி, அடுத்த நூறாண்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டே திட்டங்களை செயல்படுத்துவார்கள். அதைப்போலவே நீண்டகால பலன்களை மனதில் வைத்தே இந்த சீர்திருத்தங்களை பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்ஜி கூட, இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த பலமுறை முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. ஆனால் தற்போது இந்த சீர்திருத்தங்கள் கொண்டு வந்தபின், எதிர்க்கட்சிகளால் அது குறித்து தவறான பிரசாரம் பரப்பப்படுகிறது.
இவ்வாறு நரேந்திரசிங் தோமர் கூறினார்.
Related Tags :
Next Story