சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே


சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே
x
தினத்தந்தி 13 Dec 2020 10:35 PM GMT (Updated: 2020-12-14T04:05:19+05:30)

சீக்கிய சமூகத்துடனான பிரதமர் மோடியின் உறவு பற்றி ரெயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி., ஐந்து நாளில் 2 கோடி இ-மெயில்களை அனுப்பி உள்ளது.

புதுடெல்லி, 

சீக்கிய சமூகத்துடனான பிரதமர் மோடியின் உறவு பற்றி ரெயில்வேயின் அங்கமான ஐ.ஆர்.சி.டி.சி., ஐந்து நாளில் 2 கோடி இ-மெயில்களை அனுப்பி உள்ளது.

3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தருணத்தில், பஞ்சாப்பை சேர்ந்த சீக்கிய சமூகத்துடனான பிரதமர் நரேந்திர மோடியின் உறவும், அவரது அரசு செய்த நன்மைகள் குறித்தும் கடந்த 8-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை ஐந்து நாளில் 2 கோடி இ-மெயில்களை ரெயில்வேயின் அங்கமான இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) அனுப்பி உள்ளது. டிக்கெட்டுகளை பதிவு செய்தபோது பயணிகள் அளித்த இ-மெயில் முகவரி அடிப்படையில் இவை அனுப்பப்பட்டுள்ளன.

இந்த இ-மெயிலில் பிரதமர் மோடி மற்றும் சீக்கியர்களுடனான அவரது அரசின் சிறப்பு உறவு என்ற 47 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் அனுப்பப்பட்டுள்ளது.இது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி என மும்மொழிகளில் அமைந்துள்ளது.


இந்த இ-மெயில்கள் சீக்கிய சமூகத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது என வெளியான தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. மறுத்துள்ளது. இதையொட்டி அந்த நிறுவனம் விடுத்த அறிக்கையில், “எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இ-மெயில்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது முதல் நிகழ்வு அல்ல. முன்னதாக இது போன்ற நடவடிக்கைகளை ஐ.ஆர்.சி.டி.சி பொது நலனில் அரசு நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்காக செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், பொது நலனுக்கான தகவல் தொடர்பு உத்தியின் ஒரு பகுதியாக இ-மெயில்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கூறினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலையைத் தொடர்ந்து 1984-ம் ஆண்டு நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கியது, ஜாலியன்வாலாபாக் நினைவுச்சின்னம், லங்கருக்கு (சீக்கிய உணவு) வரிவிலக்கு, பாகிஸ்தானில் உள்ள தர்பார்சாகிப் குருத்வாராவை இந்தியாவுடன் இணைத்து கர்தார்பூர் பாதை அமைத்தது உள்ளிட்டவை குறித்து 13 தலைப்புகளில் சீக்கிய சமூகத்தினருக்கு மோடியின் அரசு செய்த நன்மைகள் குறித்து அந்த சிறிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story