டெல்லி எல்லைகளில் குவிந்த விவசாயிகள், 9 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 14 Dec 2020 8:56 AM IST (Updated: 14 Dec 2020 8:56 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி எல்லைகளில் விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள  மூன்று  புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தின்  ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர்.உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி  டெல்லி எல்லைகளில்  விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

நாங்கள் அரசாங்கத்தை தட்டி  எழுப்ப விரும்புகிறோம். எனவே, எங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் 40  விவசாய  சங்க தலைவர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து எல்லைப் பகுதிகளிலும்  உண்ணாவிரத போராட்டத்தில் அமர்வார்கள். அவர்களில் 25 பேர் சிங்கு எல்லையிலும், 10 பேர் டிகிரி எல்லையிலும், 5  பேர்  உத்தரபிரதேச எல்லையிலும் அமர்வார்கள் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்  பொதுச்செயலாளர் ஹரிந்தர் சிங் லாகோவால் கூறி உள்ளார்.

விவசாயிகளின் ஒற்றுமையை உடைக்க மத்திய அரசு விரும்புகிறது என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். விவசாயிகள் இன்னும் அதிக எண்ணிக்கையில்  போராட்ட களத்திற்கு வருகிறார்கள், மேலும் மூன்று புதிய வேளாண்  சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என கூறினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தானும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக் அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் 

விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக  ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வேன்.. ஆம் ஆத்மி தொண்டர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு  நான் கேட்டுக்கொள்கிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை  உத்தரவாதம் அளிக்க ஒரு மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

Next Story