கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது


கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 14 Dec 2020 9:05 AM IST (Updated: 14 Dec 2020 9:05 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் உள்ளாட்சி தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

கோழிக்கோடு,

கேரள மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8, 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.

10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 3-வது கட்டமாக இன்று (திங்கட்கிழமை) மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங் களில் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்பதற்காக கோடுகளும் வரையப்பட்டு உள்ளன. பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 10 ஆயிரத்து 642 வாக்குச்சாவடிகள் உள்ளன.  மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story