விவசாயிகள் 19வது நாளாக தொடரும் போராட்டம் : டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 14 Dec 2020 7:44 AM GMT (Updated: 2020-12-14T13:14:01+05:30)

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி தேசிய நெடுஞ்சாலை-24 ல் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுடெல்லி

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 19-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று  உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர். உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.போராட்டக்காரர்கள் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தையும் நடத்துவார்கள் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி  செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அதன்படி  டெல்லி எல்லைகளில்  விவசாய அமைப்பு தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முக்கிய போராட்ட தளங்களில் ஒன்றான அரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்குவில் முப்பத்து மூன்று  விவசாய  தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு  உள்ளனர். 

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவாய் மாதோபூரைச் சேர்ந்த கிசான் மகாபஞ்சாயத்தின் தலைவர் ராம்பால் ஜாட் கூறும் போது  நாங்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த போராட்டத்தில்  இறந்த 11 பேருக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்த விரும்புகிறோம் என கூறினார்.

காசிப்பூர் (டெல்லி-உத்தரபிரதேசம் ) எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று தேசிய நெடுஞ்சாலை -24  ல் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து பாரதிய கிசான் யூனியனின் ராகேஷ் டிக்கைட் கூறும் போது

எங்களால்  சாதாரண மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.  சில நிமிடங்கள் கூட முக்கியம் என்பதை அவர்கள் ஒருமுறை உணர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என கூறினார். 

விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக காசியாபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் போக்குவரத்துக்கு காசிப்பூர் எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனந்த் விஹார், டி.என்.டி, சில்லா, அப்சரா மற்றும் போப்ரா எல்லைகள் வழியாகமாற்று வழியில் மக்கள் செல்ல டெல்லி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளார்கள். 

அது போல் சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி & மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சஃபியாபாத் மற்றும் சிங்கு கட்டண வரி எல்லைகள் வழியாக மாற்று வழிகளை மேற்கொள்ளுங்கள். முகர்பா & ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. வெளி ரிங் சாலை, ஜி.டி.கே சாலை மற்றும் என்.எச் -44 ஐ தவிர்க்கவும் என  போலீசார் கூறி உள்ளனர்.

இந்த் நிலையில் டெல்லி - நொய்டா சாலையில் முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்குத் திறந்தது தொடர்பாக விவசாய சங்கத்தினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சில்லா என்னுமிடத்தில் பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனியன்று இந்த அமைப்பின் தலைவர் பானு பிரதாப் சிங், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சு நடத்தியதை அடுத்துச் சுங்கச்சாவடி முற்றுகையைக் கைவிட்டுப் போக்குவரத்துக்காகச் சாலை திறந்துவிடப்பட்டது. இந்த அமைப்பின் உத்தரப்பிரதேசத் தலைவர் யோகேஷ் பிரதாப் முற்றுகையைக் கைவிட உடன்படவில்லை.

சாலையைத் திறக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யோகேஷ் பிரதாப், அமைப்பின் தேசியப் பொதுச்செயலாளர் சிம்மேந்திரசிங், செய்தித் தொடர்பாளர் சதீஷ் சவுத்ரி ஆகியோர் சங்கத்தில் இருந்து விலகியுள்ளனர்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Next Story