திரிணாமுல் காங்கிரஸ் கல்வீச்சில் காயமடைந்த பா.ஜக பொதுச்செயலாளருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு
திரிணாமுல் காங்கிரஸ் கல்வீச்சில் காயமடைந்த பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவுக்கு குண்டு துளைக்காத காருடன் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த 10-ந்தேதி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரசார் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உள்ளிட்டோரின் கார்கள் சேதமடைந்தன. கைலாஷ் விஜயவர்கியா, பா.ஜனதா துணைத்தலைவர் முகுல்ராய் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், கைலாஷ் விஜயவர்கியாவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் அவரது சுற்றுப்பயணத்தின்போது, அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த காரில் அவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அவரது சுற்றுப்பயணத்தின்போது, ஆயுதம் தாங்கிய 7 கமாண்டோக்கள் உடன் செல்வார்கள். 2 பாதுகாப்பு வாகனங்களும் செல்லும்.
கைலாஷ் விஜயவர்கியா வீட்டில் எந்நேரமும் 2 முதல் 8 தொழிலக பாதுகாப்பு படையினர் காவலுக்கு இருப்பார்கள். அவருடன் 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் எப்போதும் இருப்பார்கள். மொத்தம் அவருக்கென 22 பாதுகாப்பு படையினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். கைலாஷ் விஜயவர்கியா நேற்று கொல்கத்தாவுக்கு சென்றார். அப்போது, தனக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்தார்.
Related Tags :
Next Story