உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேச தயார்; மத்திய மந்திரி தோமர் அறிவிப்பு
உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று மத்திய விவசாய மந்திரி தோமர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த 40 அமைப்புகளில் இடம்பெறாத ஒரு அமைப்பு உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாரதீய கிசான் யூனியன் (கிசான்) ஆகும்.இதன் பிரதிநிதிகள், மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமரை நேற்று சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள், வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடர்பாகவும் சில ஆலோசனைகளை கூறி உள்ளனர். அவற்றில் முக்கியமானவை:–
* சர்ச்சை ஏற்பட்டால் சிவில் கோர்ட்டுகளுக்கு செல்வதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பு தரலாம்.
* சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சந்தையின் தலைவருக்கு வழங்கும் அதே முக்கியத்துவத்தை உள்ளாட்சி அமைப்பின் தலைவருக்கும் தரலாம்.
* பாசனத்துக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
* விளைபொருட்களின் தரம், கொள்முதல் மையத்தில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் விற்பனை செய்வதில் பிரச்சினை வராது. இவ்வாறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பை தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் பவன் தாக்கூர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் பற்றி மந்திரி விரிவாக விளக்கினார். அந்த சட்டங்கள் உண்மையிலேயே நல்ல சட்டங்கள் என உணர்ந்தோம். எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றை மந்திரி தீர்த்துவைத்தார். எங்களுடைய கோரிக்கைகளை கவனிப்பதாகவும் அவர் தெரிவித்தார்’’ என கூறினார்.
இதைத் தொடர்ந்து மத்திய விவசாய அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:–
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாரதீய கிசான் யூனியன் (கிசான்) அமைப்பினருக்கு மந்திரி தோமர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது.
மேலும், உண்மையான விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் அரசு பேச்சு வார்த்தையை தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என மந்திரி தோமர் தெரிவித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story