டெல்லி விவசாயிகள் போராட்டம்: பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் அறிவுரை


டெல்லி  விவசாயிகள் போராட்டம்: பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட் அறிவுரை
x
தினத்தந்தி 16 Dec 2020 8:24 AM GMT (Updated: 2020-12-16T13:54:41+05:30)

டெல்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் அவர்கள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வியை எழுப்பியது.


புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று  அரியானா, பஞ்சாப் மற்றும் பலவேறு மாநிலங்களை  சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்  தொடர்பாக டெல்லியை சேர்ந்த ரிஷப் சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனு தாக்கல் செய்தார் அந்த மனுவில் 

கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அதிக அளவில் கூட்டத்தை கூட்டுவது சட்ட விரோதம். இதனால் கொரோனா தொற்று பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் விவசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவ சேவை பெறுவதற்கும், வருபவர்களுக்கும், ஆம்புலன்ஸ் போன்றவைக்கும் இடையூறு விளைவிப்பதாக உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுபோல், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவரும், வக்கீல் ரீபக் கன்சலும் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது  விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி  கேள்வியை எழுப்பியது.  கடுமையான குளிரிலும் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை கேட்க வேண்டும்.

விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்  கருத்து தெரிவித்தது. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகள் எடுபடாது என்றும்  மீண்டும் தோல்வியடையும் என்று சுப்ரீம் கோர்ட்  தெரிவித்தது அதனால் மத்திய அரசின் பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும் இந்த போராட்டம் விரைவில் ஒரு தேசிய பிரச்சினையாக மாறும், பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என கூறியது.

 விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய  மனுக்கள் மீது நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் டெல்லி, அரியானா மாநில  அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 

Next Story