நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு


நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி வெளிநடப்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 8:22 PM GMT (Updated: 16 Dec 2020 8:22 PM GMT)

சீன அத்துமீறல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பல்வேறு நாடாமன்ற குழுக்களில் உறுப்பினராக உள்ளார். இதில் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜனதா உறுப்பினர் ஜூவல் ஓரம் தலைமையிலான இந்த குழுவின் கூட்டத்தில், உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் இந்திய முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் சீருடை குறித்த விவகாரம் குறித்து பேசப்பட்டது. இந்த விவாதம் நீண்ட நேரம் நடந்தது.

அப்போது ராகுல் காந்தி எழுந்து, லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் மற்றும் அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பேச அனுமதி கேட்டார். குறிப்பாக, சீருடை விவகாரம் குறித்து அதிக நேரம் பேசுவதற்கு பதிலாக, தேசிய பாதுகாப்பு மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு மனநிலைக்கு எதிராக லடாக்கில் போராடி வரும் படைகளை பலப்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு ராகுல் காந்திக்கு நாடாளுமன்ற குழு தலைவர் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்த ராகுல் காந்தி, நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்ற 2 உறுப்பினர்களான ராஜீவ் சதவ், ரேவந்த் ரெட்டி ஆகியோரும் வெளியேறினர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை குறித்து பேசாமல், பாதுகாப்பு படையினரின் சீருடை குறித்து பேச நேரத்தை வீணடிப்பதாக ராகுல் காந்தி பின்னர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story