கேரள உள்ளாட்சி தேர்தல்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 5 மாநகராட்சிகளை கைப்பற்றியது


கேரள உள்ளாட்சி தேர்தல்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 5 மாநகராட்சிகளை கைப்பற்றியது
x
தினத்தந்தி 17 Dec 2020 5:06 AM IST (Updated: 17 Dec 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 5 மாநகராட்சிகளை கைப்பற்றியது. நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை பிடித்தது.

கோழிக்கோடு, 

கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் சுயேச்சை என்று 4 முனை போட்டி நிலவியது. 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தொடக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பல இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 2-வது இடத்தில் இருந்தது. பின்னர் மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். அதுபோன்று காங்கிரஸ் கட்சியும் கணிசமான இடங்களை பிடித்து உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் விவரம் வருமாறு:-

கிராம ஊராட்சிகள் (941)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி - 514

காங்கிரஸ் கூட்டணி - 375

பா.ஜனதா- 23

சுயேச்சை - 29

வட்டார பஞ்சாயத்துகள் (152)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 108

காங். கூட்டணி - 44

நகராட்சிகள் (86)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 35

காங். கூட்டணி - 45

பா.ஜனதா- 2

சுயேச்சை- 4

மாவட்ட ஊராட்சிகள் (14)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 10

காங். கூட்டணி- 4

மாநகராட்சிகள் (6)

மார்க்சிஸ்ட் கம்யூ. கூட்டணி- 5

காங். கூட்டணி - 1

5 மாநகராட்சிகளில் கம்யூனிஸ்டு வெற்றி

மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், கொச்சி ஆகிய 5 மாநகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும், கண்ணூர் மாநகராட்சியை காங்கிரசும் கைப்பற்றி உள்ளது. வட்டார பஞ்சாயத்து, மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

கொச்சியில் ஒரு ஓட்டில் காங்கிரஸ் தோல்வி

கொச்சி மாநகராட்சியில் ஐலேண்ட் (வடக்கு) என்ற இடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் என்.வேணுகோபால் காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றினால் என்.வேணுகோபாலை மேயராக்குவது என்றும் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது என்.வேணுகோபால் (181 வாக்குகள்), பா.ஜனதா வேட்பாளர் பத்மகுமாரியிடம் (182 வாக்குகள்) ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

பாலக்காடு நகராட்சியை மீண்டும் பா.ஜனதா கைப்பற்றியது

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பா.ஜனதா கைப்பற்றி இருந்தது. அதுபோன்று இந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாலக்காடு நகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றி இருக்கிறது.

அதுபோன்று பத்தினம்திட்டா மாவட்டம் பந்தளம் நகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றி இருக்கிறது. இந்த பகுதியில்தான் சபரிமலை ஐயப்பன் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் பந்தளம் நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வசம் இருந்தது.

ஆளும் கட்சி உற்சாகம்

கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு எதிராக ஏராளமான ஊழல் புகார்கள், தங்கம் கடத்தல் விவகாரம் ஆகியவை உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு எதிராக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் இந்த தேர்தல் பார்க்கப்பட்டது.

ஆனால் நகராட்சிகளை தவிர அனைத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று இருப்பது ஆளும் தரப்புக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

Next Story