கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் மற்றும் வகுப்புவாத அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் - ஜே.பி.நட்டா


கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் மற்றும் வகுப்புவாத அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்  -  ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 17 Dec 2020 11:43 AM IST (Updated: 17 Dec 2020 11:43 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு நன்றி என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கடந்த அக்டோபர் 1-ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.

1 கோடியே 29 லட்சத்து 25 ஆயிரத்து 766 பேர் ஆண்கள், 1 கோடியே 41 லட்சத்து 94 ஆயிரத்து 725 பேர் பெண்கள். 282 பேர் திருநங்கைகள் என்று மொத்தம் 2 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரத்து 823 வாக்காளர்கள் இடம் பிடித்து இருந்தனர். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பா.ஜனதா கூட்டணி மற்றும் சுயேட்சை என்று 4 முனை போட்டி நிலவியது.

அதன்படி கடந்த 8-ந் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களிலும், 10-ந் தேதி கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களிலும், 14-ந் தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் 8-ந் தேதி நடந்த தேர்தலில் 73.01 சதவீதமும், 2-ம் கட்டமாக நடந்த தேர்தலில் 76.78 சதவீதமும், 3-வது கட்டமாக நடந்ததில் 76.40 சதவீத வாக்குகளும் பதிவானது. தபால் ஓட்டுகள் என்று சேர்த்து 3 கட்டமாக நடந்த தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது.

தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்தரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, 244 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா பரவலை தடுக்க வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளருடன் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தொடக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி பல இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 2-வது இடத்தில் இருந்தது. பின்னர் மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. 

மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், கொச்சி ஆகிய 5 மாநகராட்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளும், கண்ணூர் மாநகராட்சியை காங்கிரசும் கைப்பற்றி உள்ளது. வட்டார பஞ்சாயத்து, மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி ஆகியவற்றில் பா.ஜனதாவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாவது:

‘‘கேரள உள்ளாட்சித் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதல் வெற்றியை பாஜகவுக்கு தந்த மக்களுக்க எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் ஊழல் மற்றும் வகுப்புவாத அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம் என்றார்.

Next Story