டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர்: வேளாண் சட்ட நகல்களை கிழித்து பரபரப்பு ஏற்படுத்திய எம்.எல்.ஏ.
டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை கிழித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 22வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டம் முடிவுக்கு வர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இதனை தொடர்ந்து விவசாயிகள், சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் முகாமிட்டு உள்ளனர். இதனால், டெல்லியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக எல்லை பகுதிகளில் போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா விமானம் வழியேயும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
டெல்லி போக்குவரத்து காவல் துறையினர் தகவலின்படி சிங்கு, ஆச்சண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. லம்பூர், சபியாபாத் மற்றும் சிங்கு கட்டண வரி சாலைகள் வழியாக மாற்று வழித்தடங்களில் பயணிகள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் முகர்பா மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், தெற்கில் இருந்து டெல்லி செல்லும் பயணிகள், சொந்த மாநிலத்திற்கு திரும்புவோர் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி விவாதிக்க
டெல்லி சட்டசபை உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் என்பவர், மத்திய அரசின் வேளாண் சட்ட நகல்களை அவை உறுப்பினர்களின் முன்னிலையில் கிழித்துள்ளார். அவர் அவையில் நகல்களை கிழித்தபடியே கூறும்பொழுது, விவசாயிகளுக்கு எதிரான இந்த கருப்பு சட்டங்களை நான் ஏற்கமாட்டேன் என கூறினார்.
டெல்லி சட்டசபையில் விவசாயிகள் போராட்டம் பற்றிய விவாதத்தில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மத்திய அரசின் சட்ட நகல்களை கிழித்தது உறுப்பினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story