சீனாவுடன் நடந்து வரும் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படும் - இந்தியா நம்பிக்கை


சீனாவுடன் நடந்து வரும் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படும் - இந்தியா நம்பிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2020 11:28 PM GMT (Updated: 17 Dec 2020 11:28 PM GMT)

சீனாவுடன் நடந்து வரும் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

லடாக்கில் சீனாவின் அத்துமீறலால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இரு தரப்பும் அங்கு 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை குவித்துள்ளன. இதனால் எல்லையில் 7 மாதங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் லடாக் அமைதி பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை எப்போது? என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவாவிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது, ‘இரு தரப்பும் தொடர்ந்து நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளால் அசல் எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் முழுமையான படைவிலக்கல் மற்றும் அமைதி, நிலைத்தன்மை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுக்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் லடாக்கில் அமைதியை திரும்ப கொண்டுவருவதற்காக இரு தரப்பும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story