ஆஸ்திரேலியா to கைலாசா... 3 நாட்கள் இலவச ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு நித்தியானந்தா அழைப்பு!


ஆஸ்திரேலியா to கைலாசா... 3 நாட்கள் இலவச ஆன்மிக சுற்றுலா பக்தர்களுக்கு நித்தியானந்தா அழைப்பு!
x
தினத்தந்தி 18 Dec 2020 2:36 AM GMT (Updated: 18 Dec 2020 2:36 AM GMT)

கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள், இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய ஆசிரமத்தை உருவாக்கி  உள்ளார். இந்தியா மட்டுமின்றி, இவருக்கு என்று வெளிநாட்டிலும் பக்தர்கள் உள்ளனர்.  ஆனால், காலப்போக்கில் நித்தியானந்தா மீது  பல குற்றச்சாட்டுகள் எழுந்தன 

இதனால்  இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா, கைலாசா என்று ஒரு தனிநாட்டை உருவாக்கி அங்கு தன்னுடைய ஆசிரம நிர்வாகிகளுடன் இருந்து வருகிறார்.அங்கிருந்த படி தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வரும் இவர், சில மாதங்களுக்கு முன்பு, கைலாசாவிற்கான கொடி, கைலாசாவிற்கான பாஸ்போர்ட் போன்றவைகளை அறிமுகம் செய்து வைத்தார். 

இந்நிலையில், தற்போது, கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் மின்னஞ்சலில்(மெயில்) விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனிதர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ள அவர் ஆர்வம் உள்ளவர்கள் கைலாசா வெப்சைட் மூலமாக தன்னை சந்திக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். தினசரி 10 முதல் 25 நபர்களை மட்டும் சந்திக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்

ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அவர் தனது சத்சங்க உரையில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மீண்டும் அவுஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story