புதிய வேளாண் சட்டங்கள் ஒரே நாளில் கொண்டு வரப்படவில்லை - பிரதமர் மோடி விளக்கம்


புதிய வேளாண் சட்டங்கள் ஒரே நாளில் கொண்டு வரப்படவில்லை - பிரதமர் மோடி விளக்கம்
x
தினத்தந்தி 19 Dec 2020 6:49 AM IST (Updated: 19 Dec 2020 6:49 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்கள் ஒரே நாளில் கொண்டு வரப்படவில்லை எனவும், நீண்ட காலமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போபால்,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் என பிரதமர் மோடி மீண்டும் உறுதியளித்து உள்ளார். மத்திய பிரதேச விவசாயிகளுடன் நேற்று மெய்நிகர் முறையில் உரையாற்றிய பிரதமர், இது தொடர்பாக கூறியதாவது:-

இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக கடந்த 20 முதல் 22 ஆண்டுகளாக மத்திய அரசும், மாநில அரசுகளும் விரிவாக ஆலோசனை நடத்தி வந்தன. விவசாய அமைப்புகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் கூட இதற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

உண்மையில், இந்த சீர்திருத்தங்களை தங்கள் தேர்தல் அறிக்கைகளில் நீண்ட காலமாக இடம்பெறச்செய்தும், அமல்படுத்தாதது ஏன்? என இந்த சட்டங்களை எதிர்ப்பவர்களிடம் விவசாயிகள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு இதெல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் பிரச்சினை எல்லாம், மோடி எப்படி இதை செய்தார்? இதன் பலன்கள் மோடிக்கு ஏன் கிடைக்க வேண்டும்? என்பதுதான்.

இந்த சட்டங்கள் அனைத்தும் உங்கள் தேர்தல் அறிக்கைக்கு கிடைத்த பலன்தான், எனக்கு அல்ல. நான் விவசாயிகளின் முன்னேற்றத்தை விரும்பினேன் அவ்வளவுதான். ஆனால் இந்த பிரச்சினையில் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதை நிறுத்துங்கள். அரசு மீது கணை தொடுப்பதற்கு விவசாயிகளின் தோள்களை பயன்படுத்துகிறீர்கள்.

புதிய வேளாண் சட்டங்களில் இருக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுங்கள் என நாங்கள் மீண்டும் மீண்டும் விவசாயிகளை கேட்கிறோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு 24 மணி நேரமும் தயாராக இருக்கிறது.

நாட்டில் தங்கள் அரசியல் தளத்தை இழந்தவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த அரசியல் கட்சிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். தங்கள் ஆட்சியில் சுவாமிநாதன் கமிட்டியின் அறிக்கையை கிடப்பில் போட்டிருந்தனர். இதற்காக விவசாயிகள் போராடியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் நாங்கள், விவசாயிகளை உணவளிப்பவர்களாக நடத்துகிறோம். எனவே அவர்களது முன்னேற்றத்துக்காக சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தி இருக்கிறோம். உற்பத்தி செலவை விட 1½ மடங்கு அதிக மதிப்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்து இருக்கிறோம்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எங்கள் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. விதைப்பதற்கு முன்னரே இந்த விலையை அரசு அறிவிக்கிறது. இந்த சட்டம் அமல்படுத்தி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தற்போதும் நாங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில்தான் விளைபொருட்களை கொள்முதல் செய்கிறோம்.

அதே வேளாண் உற்பத்தி சந்தைக்குழுக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. கடந்த 6 மாதங்களில் எந்த ஒரு மண்டியும் மூடப்படவில்லை. மாறாக அவற்றின் நவீன மயமாக்கலுக்காக அரசு ரூ.500 கோடி வரை செலவழித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை ஒழிக்கப்படும் என்பதை விவேகமுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள். இதைவிட பெரிய பொய்யோ, சதியோ வேறு இருக்க முடியாது. புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் உற்பத்தி சந்தைக்குழு (ஏ.பி.எம்.சி.) போன்றவற்றுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவை தொடர்ந்து இருக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story