பரூக் அப்துல்லாவின் ரூ. 12 கோடி சொத்துக்கள் முடக்கம்
கிரிக்கெட் சங்க நிதி மோசடியில், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது. இந்த நிதியை முழுமையாக கிரிக்கெட் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதை விட்டு விட்டு, ரூ..43.69 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் சுருட்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள், மோசடியாக சுருட்டிய தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமலாக்கத்துறை ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இது தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்கள் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் உள்ளன. 2 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு வணிக கட்டிடம், 3 மனைகள் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஆகும்.
இந்த சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு ரூ.11.86 கோடி என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ..60 கோடி முதல் ரூ.70 கோடி வரையில் இருக்கும் என்று மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story