ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க பிப்ரவரி வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு


ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க பிப்ரவரி வரை அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2020 6:27 AM GMT (Updated: 21 Dec 2020 6:27 AM GMT)

ஓய்வூதியம் பெறுவோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க பிப்ரவரி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பென்சன் பெறுபவர்களின் நலன்கருதி, அவர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் அவகாசத்தை பிப்ரவரி வரை நீட்டித்து ஓய்வூதிய நலத்துறை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதுபற்றி நிருபர்களிடம் பேசிய அவர், “ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளில் ஓய்வூதியதாரர்கள் கூடுவதால், தொற்று நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என்றார்.

“80 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு தனி கவுண்ட்டர் ஒதுக்கப்பட்டு நவம்பர் முதல் அவர்கள் தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை தொடர வருடம்தோறும் ஆயுள் சான்றிதழ் தேவைப்படுவதால், சான்றிதழ் வழங்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கி தபால் வங்கி கணக்கு வழியாக பெறும் வகையில் எளிமையாக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஓய்வூதியதாரர்களுக்கு மிகவசதியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக முகத்தை காட்டியதும் அடையாளம் காணும் தொழில்நுட்பம் வழியாக ஆயுள் சான்றிதழ் வழங்கும் முறையை கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

Next Story