இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்


இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை:  இன்று நள்ளிரவு முதல் அமல்
x
தினத்தந்தி 22 Dec 2020 1:22 AM GMT (Updated: 22 Dec 2020 1:33 AM GMT)

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த நாட்டுக்கான விமான சேவையை இன்று நள்ளிரவு முதல் 31ந்தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரசின் உயிர் வாங்கும் வேட்கை இன்னும் அடங்கவில்லை.

நாளும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகளையும், மரணங்களையும் உலகுக்கு பரிசளித்து வரும் அதன் கொடூர கரங்கள் அப்பாவி மக்களை நோக்கி விரிவடைந்து வருகின்றன. ஏழை நாடுகள், வல்லரசு நாடுகள் என எந்த வித பேதமும் பாராமல் லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையோ கோடிகளை கடந்திருக்கின்றன.

இந்த கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளுக்காக மனித குலம் ஓராண்டாக போராடியதன் பலனாக தற்போதுதான் இந்த அரக்கனுக்கு எதிரான தடுப்பூசிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி இருக்கின்றன. அதுவும் அவசர பயன்பாடு மற்றும் முன்னுரிமைதாரர்களுக்கு மட்டுமே போடப்படுகின்றன.

இப்படி உகானில் தோன்றிய கொரோனா மீதே உலக நாடுகளின் கவனம் ஒருமித்து இருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தில் புது வகையான கொரோனா என்ற புதிய பூதம் ஒன்று கிளம்பி இருக்கிறது. அதாவது இங்கிலாந்தின் தெற்கு பகுதி மற்றும் தலைநகர் லண்டன் போன்ற இடங்களில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது.

இது ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசின் ஒரு பிறழ்வு வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய வகை வைரசானது ஏற்கனவே பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

அதேநேரம் முந்தைய வைரசை விட இந்த வைரஸ் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதும், இந்த வைரஸ் தீவிர பாதிப்புகள் மற்றும் அதிக இறப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்தும், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் இந்த வைரசை எந்த அளவுக்கு எதிர்க்கும் என்பதற்கும் எத்தகைய ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய வகை வைரசால் எழுந்துள்ள மோசமான சூழல் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று அரசின் அவசர கமிட்டியை கூட்டி ஆலோசனை நடத்தினார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு முதன் முதலில் ஒப்புதல் அளித்த நாடு இங்கிலாந்து ஆகும். அங்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியவர்கள் என முன்னுரிமைதாரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் புதிய வகையான தொற்று அங்கு பரவி வருவது அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடங்கி இருக்கும் நிலையில், கட்டுப்பாடு இன்றி பரவி வரும் இந்த வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்க பிரிட்டன் அரசு தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த பண்டிகைக்காக ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு சலுகைகளையும் அரசு ரத்து செய்துள்ளது.

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்புகளில் இருந்து தங்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு வைரசும் மிரட்டுவது அரசுகளுக்கு மிகுந்த பீதியை கொடுத்து இருக்கிறது.

எனவே பல நாடுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. இதில் முதல் நடவடிக்கையாக இங்கிலாந்துடனான விமான சேவைகளை பல நாடுகள் ரத்து செய்ய தொடங்கி உள்ளன.

அந்தவகையில் கனடா, டென்மார்க், ஈரான், குரேஷியா, பல்கேரியா, அயர்லாந்து, துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, மொராக்கோ, குவைத், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன.

அதேநேரம் சவுதி அரேபியாவோ, அனைத்து நாடுகளுக்கும் விமான சேவையை ரத்து செய்து, தனது எல்லைகள் அனைத்தையும் மூடி விட்டது.

இந்த புதுவித வைரஸ் பரவல் இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்திருக்கும் நிலையில், இந்த புதிய வகை வைரசின் தோற்றம் நாடு முழுவதும் மேலும் பீதியை உண்டாக்கி இருக்கிறது.

எனவே இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக முதல்–மந்திரிகள் அசோக் கெலாட், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இங்கிலாந்துக்கான விமான சேவையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கான விமான சேவையை 31ந்தேதி வரை ரத்து செய்யுமாறு சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் சிங் கரோலாவுக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷண் நேற்று பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதன்படி இங்கிலாந்துக்கான விமான சேவை இன்று நள்ளிரவு முதல் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில், ‘இங்கிலாந்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் 31ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதைப்போல இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்களும் மேற்படி காலகட்டத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதைப்போல முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, இங்கிலாந்தில் இருந்து 22ந்தேதி (இன்று) நள்ளிரவு வரை வரும் மற்றும் செல்லும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் பயணிகள் மாநிலங்கள் ஏற்படுத்தி இருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார். அதேநேரம் தொற்று இல்லை என தெரியவந்தால், அவர்கள் 7 நாட்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 31ந்தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும் வந்தே பாரத் திட்டம் மூலம் கடந்த மே மாதம் முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வைரசால் நாடு முழுவதும் எழுந்துள்ள அச்சம் மற்றும் விமான சேவை ரத்து கோரிக்கை குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்‌ஷவர்தனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:–

இதை எல்லாம் வெறும் கற்பனை சூழல்கள், கற்பனை பேச்சுகள், கற்பனை பீதி என்றுதான் நான் கூறுவேன். இவற்றில் நீங்கள் ஈடுபட வேண்டாம்.

ஒவ்வொன்றை பற்றியும் அரசு முழு எச்சரிக்கையாக இருக்கிறது. என்னை கேட்டால், இந்த விவகாரத்தில் பீதியடைய தேவையில்லை என்றுதான் கூறுவேன். கடந்த 1 வருடமாக கொரோனா சூழலை கையாண்டதன் மூலம், இத்தகைய சூழலை கையாளும் முறையை அரசு நன்கு அறிந்துள்ளது.

கொரோனாவின் எந்தவொரு அம்சத்தையும் எதிர்த்து போராடவும், அது குறித்து தெரிந்துகொள்வதற்கும், பங்களிப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தில் விஞ்ஞான சமூகம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது.  இவ்வாறு ஹர்‌ஷவர்தன் கூறினார்.

முன்னதாக, இந்த புதிய வகை வைரசின் தாக்கம் மற்றும் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. அமைச்சகத்தின் கூட்டு மேற்பார்வைக்குழு இந்த ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் தோன்றிய கொரோனாவிடம் மண்டியிட்ட உலக நாடுகள் இன்னும் அதில் இருந்து நிமிராத நிலையில், மற்றொரு வீரியமான வைரஸ் தோன்றியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகள் உலக நாடுகளை மேலும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.


Next Story