41 விவசாயிகள் சங்கங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Dec 2020 11:45 PM GMT (Updated: 23 Dec 2020 8:50 PM GMT)

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் 41 விவசாயிகள் சங்கங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

டெல்லி, அண்டை மாநில எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் டெல்லியைச் சேர்ந்த ரிஷப் சர்மா என்பவர் உள்ளிட்டோர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களை கடந்த 17-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயுள்ள இக்கட்டான நிலைக்கு தீர்வுகாண, வேளாண்துறை நிபுணர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்டு சுதந்திரமான குழுவை அமைப்பதே சரியானது என கருதுகிறோம். அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்காமல் சுதந்திரமான குழுவை அமைப்பது சாத்தியமில்லை. சுதந்திரமான குழு அமைப்பது குறித்த கருத்துகளை அடுத்த விசாரணை தேதிக்குள் அளிக்க உத்தரவிடுகிறோம். இந்த வழக்கு விசாரணையை விடுமுறை காலத்துக்கு பிறகு பட்டியலிட உத்தரவிடுகிறோம். தேவைப்பட்டால், சுதந்திரமான குழு அமைப்பது குறித்து விடுமுறைகால அமர்வை அணுகவும் அனுமதி அளிக்கிறோம். நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணை, போராட்டத்தை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்காது என உத்தரவில் தெரிவித்தது.

இந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் 41 விவசாயிகள் சங்கங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பொதுநல மனு தாக்கல் செய்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷப் சர்மா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், நரேஷ்சிங் திகைத் தலைமையிலான பாரதிய கிசான் சங்கம், ஜெகஜீத் தல்லேவால் தலைமையிலான பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

Next Story