விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி பணபரிமாற்றம்: மத்திய மந்திரி தோமர்


விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி பணபரிமாற்றம்:  மத்திய மந்திரி தோமர்
x
தினத்தந்தி 25 Dec 2020 10:33 AM GMT (Updated: 25 Dec 2020 10:33 AM GMT)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில், மத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களிடம் நடத்திய பலசுற்று பேச்சுவார்த்தை பலனற்று போகவே, சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வந்தது.

ஆனால், அதனையும் ஏற்க விவசாயிகள் மறுத்து வருவதுடன், சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடி நிதியானது விவசாயிகளுக்கு இன்று விடுவிக்கப்பட்டது.  இதற்காக நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இன்று ரூ.18 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான பணம் செலுத்தப்பட்டு உள்ளது.

இதில், இடைத்தரகர்கள் இல்லை.  கமிசனும் இல்லை என கூறியுள்ளார்.  இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மேற்கு வங்காள அரசை தவிர, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் மற்ற அனைத்து மாநில அரசாங்கங்களும் இணைந்துள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.96 ஆயிரம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  மேற்கு வங்காளத்தில் இந்த திட்டம் 70 லட்சம் விவசாயிகளுக்கு பலனளிக்கும்.  இந்த திட்டத்தில் சேருவதுபற்றி மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன் என கூறியுள்ளார்.

விவசாயிகள் மீது இரக்கம் கொள்பவர்கள் போல் அவர்களை தவறாக வழி நடத்துவோருக்கு, வருங்காலத்தில் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் தோமர் கூறியுள்ளார்.

Next Story