மும்பை தாராவியில் முதன்முறையாக கொரோனா தொற்று இல்லை


மும்பை தாராவியில் முதன்முறையாக கொரோனா தொற்று இல்லை
x
தினத்தந்தி 25 Dec 2020 1:46 PM GMT (Updated: 2020-12-25T19:37:04+05:30)

மும்பை தாராவியில் கொரோனா தொற்று முதன்முறையாக இன்று இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனையடுத்து தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மராட்டியத்தில் மும்பை உள்பட மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1ந்தேதி கொரோனா வைரஸ் நுழைந்து வேகத்தில் பரவ தொடங்கியது.  ஏறக்குறைய 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவல் ஏற்பட்டவுடன், தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்துதல் மற்றும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது.  இந்நிலையில், மும்பை தாராவியில் கொரோனா தொற்று முதன்முறையாக இன்று இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதுவரை மொத்தம் 3,788 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  அவர்களில் 3,464 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  12 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை தாராவியின் 80 சதவீத மக்கள் பொது கழிவறையை நம்பியே உள்ளனர்.  ஒவ்வொரு நாளும் இதுபோன்ற 450 கழிவறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  மக்கள் பெருமளவில் வெளியில் இருந்து உணவு வாங்கியே சாப்பிடுகின்றனர்.

இதுபோன்ற சவாலான சூழலில் மக்கள் வாழ்ந்து வரும் தாராவியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்கு கடந்த ஜூலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியசெஸ் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

Next Story